தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா..!
தமிழக சட்டசபை செயலாளராக (Assembly Secretary) கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்த சீனிவாசன், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பணிக்காலம் நிறைவுபெற்று, பணி நீட்டிப்பில் (Extension) இருந்து வந்த அவர், தற்போதைய சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
சீனிவாசன் சட்டசபை பணிகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் எவ்வித மாற்றமுமின்றி அதே பதவியில் தொடர்ந்த அவர், தற்போதைய த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் காலத்திலும் அதே பொறுப்பில் நீடித்து வந்தார்.
சீனிவாசனுக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை பணிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், பதவிக் காலம் முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர் திடீரென விலகியுள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், சட்டமன்ற நிர்வாகத்தில் பல ஆண்டுகள் பழுத்த அனுபவம் வாய்ந்த ஒரு முக்கிய அதிகாரி, திடீரென தனது பொறுப்பில் இருந்து விலகியிருப்பது த.வெ.க. அரசுக்கு ஒரு பின்னடைவாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.






