வருகிற 19-ஆம் தேதி விவசாயிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை..!
மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் நடத்திய ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் 40 வேளாண் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளன.
பிற்பகல் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை உணவு இடைவேளைக்குப் பிறகும் நீடித்து மொத்தம் ஐந்து மணி நேரம் நடந்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் பல விஷயங்களில் அரசு இறங்கி வந்த நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகள் சிறிது விட்டுக் கொடுக்காதது ஏன் என அமைச்சர் தோமர் கேள்வி எழுப்பினார். மூன்று வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாகவும் சட்டங்களை திரும்பப் பெற இயலாது என்றும் அரசு தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் வருகிற 19-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சந்தித்து பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.






