திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?
அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப் தி டவுன்” சங்கதி.
இபிஎஸ் ஒரு முறை என்றால், ஓபிஎஸ் மூன்று முறை முதல்வர் பதவியை ருசித்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் சசிகலாவுடனான பிணக்கே ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கான வாய்ப்பை இழக்கச் செய்தது. சசிகலாவிடம் சரியாக காய்நகர்த்தி அந்தப் பதவியை இபிஎஸ் தக்கவைத்துக் கொண்டார்.
முதல்வர் பதவிக்கு யார்?
சசிகலா- இபிஎஸ்-க்கு எதிராக ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தி துணை முதல்வர் பதவியையும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் தக்கவைத்துக் கொண்டார் ஓபிஎஸ். ஆட்சியில் அதிகாரம் இபிஎஸ்-க்கு என்றால், கட்சியில் அதிகாரம் ஓபிஎஸ்-க்குத்தான். எந்த தேர்தலில் யாரை கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சித்தலைமையின் கையில்தான் இருக்கிறது என்பதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவது யார்? என்ற கேள்வி தமிழகத்தை வளைய வருகிறது.
ஓபிஎஸ்-அரசியல் சதுரங்கம்
இபிஎஸ் முதல்வர் அரியணையேறியதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் இபிஎஸ் அணிக்கு தாவிவிட்டனர். இன்னும் பலர் மறைமுகமாக இபிஎஸ்-ஐ ஆதரித்து வருகின்றனர். ஜெயலலிதாவிடம் நேரடி அரசியல் பயின்ற ஓபிஎஸ் தனது பாணியில் அரசியல் சதுரங்கத்தை ஆடத்தொடங்கியிருக்கிறார். தனது மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை எம்.பி.யாக்கி மத்திய அரசுடனான இணக்கத்திற்கு அனுப்பிவிட்ட அவர், தற்போது தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பை மாநில அரசியலுக்கு தயாராக்கி வருகிறார்.
வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட கதையாக ஜெயபிரதீப்பை பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அவரை வளர்த்துவிட்டு அவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமிட்ட பெருமையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டதுதான் மிச்சம். தற்போது உதயநிதி ஸ்டாலினை விட ஜெயபிரதீப் அதிகப்படியாக வைரலாகி வருகிறார்.
மாநில அரசியலில் காய் நகர்த்த நம்பகத்தன்மையான ஒரு இடத்தை மகனுக்காக ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். இதற்கான திமுக எதிர்ப்பு அரசியல், அதிமுக உட்கட்சி அரசியல் வியூகங்களையும் அவரே வகுத்துக் கொடுக்கிறார். எம்ஜிஆர்-ஜெயலலிதா சமாதிகள் தினமும் மலர்களால் அலங்கரிப்பு, மனிதநேய பணிகள் என ஜெயபிரதீப் அரசியல் தூள்பறக்கிறது. ஜெயபிரதீப்பின் இந்த திடீர் அரசியல் விஸ்வரூப நடவடிக்கைகள் இபிஎஸ் தரப்புக்கு கிலியை ஏற்படுத்தி விட்டது.
இபிஎஸ்- சக்கர வியூகம்
இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இலைமறை காய்மறையாக புகைந்து கொண்டிருந்த நிழல் யுத்தம், கொரோனா பேரிடர் காலத்தில் விம்மி வெடித்துள்ளது. தென்மண்டலங்களில் உள்ள 9 மாவட்டங்களிலும் ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் புள்ளி விவரங்களை அளித்துவிட்டனர்.
எட்டுவழிச்சாலை பிரச்னையால் ஏடாகூட இடியாப்ப சிக்கலில் தவிக்கும் இபிஎஸ் தனது செல்வாக்கை நேர்செய்ய கொங்கு மண்டலத்தைத் தாண்டி, பாண்டிய (தென்) மண்டலத்தில் ஓபிஎஸ் கோட்டையை சரிக்க தனது சக்கர வியூகத்தை வியாபிக்க தொடங்கியிருக்கிறார்.
கொரோனா நோய் தடுப்பு மீட்பு பணிகள் ஆய்வு என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை வடிவமைத்து, கடந்த ஜூலை 15ம் தேதி கொங்கு மண்டலத்தில் பயணத்தை தொடங்கி திடீரென தென்மண்டலத்திற்கு பயணத்தை திசை திருப்பியுள்ளார்.

“நூற்றுக்கணக்கான கோடிகளில் நலப்பணி..”
செல்கிற வழிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் முடிவுற்ற நலப்பணிகளையும், புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதலையும் தொடங்கி வைத்து தென் மாவட்ட நிர்வாகிகள், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரயத்தனம் செய்து வருகிறாராம். இந்த சுற்றுப்பயணத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரது ஆதரவாளர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பது போன்றதான போஸ்டர்கள் இபிஎஸ் வருகையின் போது மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பளிச்சிட்டன. கொரோனா பேரிடர் காலத்தை பொருட்படுத்தாமல் இபிஎஸ் மேற்கொண்டுள்ள இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்களும் குறிப்பிட தவறவில்லை.
“இபிஎஸ்-ஓபிஎஸ் பனிப்போர்”
இந்த நிலையில் கட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் சரிபாதி தனது ஆதரவாளர்களை களமிறக்க முடிவு செய்து விட்டார். இதனால் ஊரடங்கில் அமைதியாக உள்ள தமிழகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் பனிப்போர் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.
ர.ர.க்கள் உற்சாசம்!
சமூக வலைதளங்களிலும் ஓபிஎஸ் ராணுவம், ஓபிஆர் ராணுவம் என்ற பெயர்களிலெல்லாம் ஓபிஎஸ் ஆதரவு மற்றும் அரசியல் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை தெறிக்க விடுகின்றனர். இபிஎஸ் தரப்பிலும் இதற்கான தனியாக தொழில்நுட்பப் படை உருவாக்கப்பட்டு படுஜரூராக பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் மத்தியிலும் அதிமுக அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பிலும், சலசலப்பிலும் திமுக முன்னெடுக்கும் திட்டங்கள் மங்கிப்போய் விடுவது உ.பி.க்களை உற்சாகமிழக்க வைத்துள்ளது. ர.ர.க்கள் உற்சாசத்தில் மிதக்கின்றனர்.
இந்த பிரச்னைகளுக்கிடையே சசிகலாவின் விடுதலை பரபரப்பாக பேசப்பட்டாலும், அவரது மீள்பிரவேசம் அதிமுகவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது சந்தேகம்தான். அவரது சிறைவாசத்திற்கு பிந்தைய இடைவெளியில் தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தி கொண்டிருந்த அவரது சமுதாயம் சார்ந்தவர்களை கிட்டத்தட்ட நெருக்கிப்பிடித்து சமரசத்திற்குள் கொண்டு வரும் முயற்சி பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது.

“ஆடுபுலி ஆட்டம்”
அதேபோல் அந்த சமுதாயத்திற்கு நிகராக உள்ள நாடார் சமுதாயத்தினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி அவர்களது ஆதரவையும் பெற ஓபிஎஸ் தரப்பு படாதபாடு பட்டு வருகிறது. இதனால் நாடார்களின் முக்கிய கோரிக்கையான பனை வெட்ட தடைச்சட்டம், கள்ளுக்கான தடை நீக்கம், பனை பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்திரவாதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைதியாக காட்சியளித்த ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி ஆடுபுலி ஆட்டத்தைக் கண்டு இபிஎஸ் தரப்பு மிரட்சியில் உள்ளது.
“எரிச்சலின் உச்சத்தில் ஸ்டாலின்!”
இத்தனை அதிரிபுதிரி அரசியல் சாணக்கியத்தனங்களுக்கு மத்தியில், தமிழகத்தில் யாருக்கும் திறமையே இல்லாதது போலவும், அரசியல் தந்திர வித்தைகளை தமிழர்கள் யாரும் அறிந்திராதது போலவும், பாவனை செய்து குருட்டுப் பூனை விட்டத்துல ஏறின கதையாக சில நூறு கோடிகளை கொட்டிக் கொடுத்து வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்த பிரசாத் கிஷோர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அதிமுகவிற்கு சாதகமாகி விடுவதால் மு.க.ஸ்டாலின் எரிச்சலின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விட்டது அவரது தற்போதைய நிலைமை. காலம் காலமாக வெற்றி வாய்ப்பிற்காக கூட்டணி தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கும் கட்சிகள் அரசியல் ஆடுகளத்தில் வெற்றிவாய்ப்புள்ள கட்சித்தலைமையை எதிர்நோக்கி பார்வையை திருப்பியுள்ளனர்.
“ஆச்சரியமில்லை?”
போகிற போக்கைப்பார்த்தால் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை மாற்றி கூத்தாடிக்கு ஆப்பு வைத்து விட்டு ரெண்டுபட்டவர்கள் மீண்டும் அரியணை ஏறி ஆட்சியை பங்கிட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.









