ஆன்லைன் கேமில் தோற்றதால் மாணவன் தற்கொலை..!
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் சென்னையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவர் நிதிஷ்குமார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கொரொனா ஊரடங்கு கல்லூரி விடுமுறை என்பதால் அமைந்தகரையில் உள்ள ஒரு டாட்டூ நிலையம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கடையின் உரிமையாளரிடம் பெற்றோர் விசாரித்தனர். நிதிஷ்குமாரின் வாகனம் கடை வாசலில் இருந்ததால் மற்றொரு சாவியை வைத்து திறந்து பார்த்தபோது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருந்தார் மாணவர். அதில் ஆன்லைன் கேம் மீதான மோகத்தில் தனது பணத்தையும் வேலை பார்க்கும் நிலையத்தின் பணத்தையும் வைத்து விளையாடி தோற்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவுதான் என்றும் பெற்றோர் , காதலி, நண்பர்கள், உரிமையாளர் ஆகியோர் தன்னை மன்னிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







