--- --:--:-- --

பெண் எஸ்.பி.க்கு மிரட்டல்: சிறப்பு டி.ஜி.பி.யை உடனே கைது செய்ய ஸ்டாலின் கோரிக்கை!

Stalin 06

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும் – இந்த நிமிடம் வரை சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் முதல்வர் பழனிசாமி பாதுகாக்கிறார்.

 

பாதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ள இரு போலீஸ் அதிகாரிகளையும் இன்னும் சஸ்பெண்ட் செய்து கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எதற்காக? பெண் எஸ்.பி. புகாரளித்து 13 நாட்கள் கழிந்துவிட்டன. ஆனாலும் இதுவரை சிறப்பு டி.ஜி.பி.யும், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்தவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த வழக்கில் கைதும் செய்யப்படவில்லை!

 

இருவரையும் முதல்வர் பழனிசாமியும், அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் உள்துறை செயலாளரும், தலைமைச் செயலாளரும் அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் இவர்கள் சக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நடைபெற்ற இந்தக் கொடுமையை இன்னும் வேடிக்கை பார்ப்பதா?

 

பெண்ணினத்தின் – அதிலும் ஒரு பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும். தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon