ஒதுக்கி வைத்த பாமக! டென்ஷனில் தேமுதிக!! அதிமுக கூட்டணிக்குள் அதிருப்தி
பாமக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் அட்டையில், மாம்பழம், இரட்டை இலை, பாஜகவின் தாமரை சின்னம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது, தேமுதிகவினரை அதிருப்தியடையச் செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன; இதுவரை கூட்டணியி இடம் பெற்றிருந்த விஜயகாந்த்தின் தேமுதிக, தொகுதிப்பங்கீடு தொடர்பான சிக்கலால், கூட்டணியில் இடம் பெறுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
அதிமுக கூட்டணியை பொருத்தவரை, முதலாவதாக பாமகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது அந்த கட்சிக்கு 23 இடங்களை அதிமுக ஒதுக்கிவிட்டது. இன்னமும் பாஜக, தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அதிமுகவை வழிக்கு கொண்டு வரும் வகையில், தேமுதிகவினர் சில மறைமுக மிரட்டல்களை விடுத்துப் பார்த்தனர். அதிமுகவை நம்பி நாங்கள் இல்லை; எங்கள் பின்னால் அதிமுகதான் வந்தது என்று, எல்.கே. சுதீஷ் சுளீரென்று கூறினார். அத்துடன், ‘நமது முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்’ என்று பதிவிட்டு, அதிமுகவினரை உசுப்பிப் பார்த்தார். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா அல்லது வெளியேறிவிடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த சூழலில்தான், பாமக தலைவர் ராமதாஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை புத்தகத்தில், பாமகவின் மாம்பழம் சின்னம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம், பாஜகவின் தாமரை சின்னம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. தேமுதிகவின் முரசு சின்னம் இடம் பெறவில்லை.
அதிமுக கூட்டணியில் தற்போதுவரை தேமுதிக நீடித்து வருகிறது; கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. தேமுதிக தொடர வேண்டும் என்றுதான் அதிமுக, பாஜக உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், தேமுதிகவை திட்டமிட்டு பாமக புறக்கணித்திருப்பது விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி ஆரம்பத்திலேயே தங்களை ஒதுக்க முற்பட்டால், ஒன்றாக இணைந்து எப்படி தேர்தல் வேலைகளை பார்ப்பது? என்று தேமுதிக தொண்டர்கள் வேதனையோடு கேட்கின்றனர்.
தேர்தல் அறிக்கையில் பாமக தனது மாம்பழச் சின்னத்தை மட்டும் இடம் பெறச் செய்திருக்கலாம்; அல்லது கூட்டணி கட்சியினர் அனைவரின் சின்னங்களை வெளியிட்டிருக்க வேண்டும். கூட்டணிக்குள் இருக்கும் சுமூகநிலையை கெடுக்கும் வகையில் பாமகவின் செயல்பாடு இருப்பதாக, அதிமுக – பாஜக தொண்டர்கள் கருதுகின்றனர்.





