--- --:--:-- --

ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்பு என பகீர்!

jfgjf

ரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரின் மத்தியிலும் உள்ளது.

 

கரூர் துயர சம்பவத்திற்கு பின், திடீரென அரசியலுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்தார் விஜய். தன்னால் 41 உயிர்கள் பலியான சோகத்தில் சரியாக 30 நாட்கள் மவுனம் காத்து வந்த விஜய், அதன் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனது வழக்கமான பாணியில் பனையூருக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார்.

 

அதன்பின், மீண்டும் திமுக மீது ஆக்ரோஷமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அத்துடன் தவெக நிர்வாகிகள் நியமனம், தேர்தல் பணிகளுக்கு பொறுப்பாளர்கள் என்று கட்சி பணிகளையும் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார் விஜய். மீண்டும் விஜய் சுறுசுறுப்பாக களமிறங்கியதால், இதுவரை சோர்ந்து போயிருந்த தவெகவினர் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.

 

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, வாக்காளர் சரிபார்ப்பு தீவிர திருத்த பணிகளுக்கான படிவம் (SIR Form) திட்டமிட்டே மறுக்கப்படுவதாக நடிகர் விஜய் வெளியிட்ட திடீர் வீடியோ, தமிழக அரசியலில் ஒரு ‘மினி நிலநடுக்கத்தை’ ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக தனது ‘X’ பக்கத்தில், சுமார் 9 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய். வழக்கமான கூல் லுக்கில் இல்லாமல், கடுமையான அரசியல் தலைவரின் முகத்துடன் அவர் முன்வைத்த கருத்துக்கள், ஆட்சியாளர்களை உஷாரடையச் செய்துள்ளன.

 

விஜய் பேசியதின் சாரம் இதுதான்: “இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமைகளில், வாக்குரிமை என்பது ஒரு மனுஷன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கான அடையாளங்களில் மிக முக்கியமானது. ஆனால், இப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? நீங்க உட்பட யாருக்குமே அது இல்லை.”

 

அதாவது, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியும், புதிய பட்டியல் வெளியாகும் வரையிலும் இருக்கும் சட்டச் சிக்கலை அவர் சுட்டிக்காட்டுகிறார். இது, அரசியல் சட்ட அறிவுடனும், தேர்தல் நடைமுறைகள் மீதான கூர்மையான கவனிப்புடனும் அவர் பேசியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

 

விஜய் தனது வீடியோவில், “கடந்த ஜனவரி மாத கணக்குப்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. வாக்காளர் சரிபார்ப்பு முடிந்து, புது பட்டியல் வர்ற வரைக்கும் நம்ம வாக்காளர்களா இல்லையாங்கிறதை உறுதியே செய்ய முடியாது” என்று கொதித்துள்ளார்.

 

விஜய் பேசியதில் ஹைலைட்டான பகுதி, தவெக ஆதரவாளர்களுக்கு நடக்கும் அநீதி குறித்துக் கொதித்ததுதான். “முக்கியமா நம்மளுடைய தவெக தோழர்களுக்கு அந்த SIR ஃபார்ம் கிடைக்க மாட்டேங்குது… இதை யார் பண்றாங்க அப்படின்றது நான் சொல்லி தெரியணும்னு அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு கைப்பாவையாக இருக்கும் சில பேர் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று விஜய் பொங்கி எழுந்துள்ளார்.

 

விஜய் நேரடியாக எந்தக் கட்சியையோ, அதிகாரியையோ சுட்டிக்காட்டவில்லை என்றாலும், மத்தியில் ஆளும் பாஜக தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தினார். வாக்காளர் சரிபார்ப்புப் பணி என்பது பெரும்பாலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் நடத்தப்படுகிறது. இவர்கள் வழியாகத் தவெக ஆதரவாளர்களுக்கு மட்டும் வேண்டுமென்றே படிவங்கள் மறுக்கப்படுவது அல்லது தகவல்கள் தாமதப்படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட அரசியல் சதி என்று விஜய் குற்றம் சாட்டுகிறார்.

 

“இதனால பாதிக்கப்படுறது உழைக்கும் மக்கள், ஏழைகள், பணிக்குச் செல்லும் பெண்கள்தாம்” என்று ஆணித்தரமாக, தனது வீடியோவில் விஜய் பேசியுள்ளார். ஏனெனில், அரசுப் பணி செய்யும் பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர், அதிகாரிகள் படிவம் கொடுக்க வீட்டுக்கு வரும்போது காத்திருக்க முடியாது. அவர்களுக்கு இந்தச் சதி எளிதில் பலிக்கும் என்பதே விஜய்யின் அச்சமாக இருந்தது.

 

தவெகவின் அடித்தளமே இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும்தான். இவர்களைக் குறிவைத்தே ‘தில்லுமுல்லு’ வேலைகள் நடக்கும் என விஜய் எச்சரித்திருப்பதுதான், அவரது பேச்சின் இன்னொரு முக்கியப் பகுதி.
“ரொம்ப முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ்… நம்ம முதல் முறை வாக்காளர்கள்… நண்பா, நண்பிகள், நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். உங்க பேரை அதுல இல்லாம செய்யறதுக்கு என்னென்ன தில்லுமுள்ளு வேலைகள் செய்யணுமோ, எல்லாமே அவங்க செய்வாங்க” என்று விஜய் எச்சரித்துள்ளார்.

 

அரசியல் விமர்சகர்கள் கூற்றுப்படி, ஒரு கட்சி தனது வாக்கு வங்கியை உறுதி செய்ய, மற்ற கட்சியின் ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது அல்லது புதிய வாக்காளர்கள் சேர்வதைத் தடுப்பது போன்ற ‘சைலன்ட் அட்டாக்குகளை’ செய்வது சாதாரணமான ஒன்றுதான். இந்தத் தில்லுமுல்லுக்களை எதிர்த்துப் போராடவே, விஜய் தனது ஆதரவாளர்களான ‘விர்ச்சுவல் வாரியர்ஸை’ களம் இறக்கியுள்ளார்.

 

“மை டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ், இதை சாதாரணமாக எடுத்துக்காதீங்க… எல்லாருக்குமே அந்த ஃபார்ம் போய் சேரணும். இதுல ரொம்ப உறுதியா இருங்க. அப்படியும் கிடைக்கலேன்னா, இருக்கவே இருக்கு ஆன்லைன். தேர்தல் ஆணைய வெப்சைட்டில் போய் ஃபார்மை டவுன்லோட் பண்ணுங்க” என்றும் தனது கட்சியினருக்கு விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

 

மேலும், “உங்க வீட்ல இருக்கறவங்களுக்கும், பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கும், தெரிஞ்சவங்களுக்கும் தெரியாதவங்களுக்கும், எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சு செஞ்சு கொடுங்க” என்று விஜய் கூறியது, ஒவ்வொரு தவெக தொண்டரையும் ஒரு ‘வாக்காளர் பதிவுப் போராளியாக’ மாற்றும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

 

இறுதியாக, அறிஞர் அண்ணாவின் மேற்கோளைப் பயன்படுத்திய விஜய், “ஓட்டுன்னு ஒன்னு இருந்தாதான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும்” என்று கூறி, வாக்காளர் அடையாளத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகப் பதிவு செய்து, வீடியோவை நிறைவு செய்தார்.

 

இந்த ஒற்றை வீடியோ, தவெகவை அரசியலில் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது என்பதையும், களத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் விஜய் கூர்மையாகக் கவனித்து வருகிறார் என்பதையும் ஆளும் தரப்புக்குப் புரிய வைத்திருக்கிறது. அத்துடன், தவெக தொண்டர்கள் இனி வெறும் ரசிகர்கள் அல்ல; அவர்கள் தங்கள் தலைவர் கட்டளையை நிறைவேற்றும் ‘வாக்காளர் உரிமைப் பாதுகாவலர்கள்’ என்ற புதிய அரசியல் அடையாளத்தை விஜய் தர முயன்றிருக்கிறார்.

 

வரவிருக்கும் தேர்தலுக்கு முன், இந்த ‘SIR’ ஃபார்ம் விவகாரம், தமிழகத்தில் புயலை கிளம்பும் என்பது மட்டும் நிச்சயம். இந்த விவகாரத்தை, திமுகவை தொடர்ந்து தற்போது தவெகவும் கையில் எடுத்துள்ளது. வரும் தேர்தலில் வாக்காளர்களை கவர, விஜய்க்கு இந்த விவகாரம் ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a Reply

Right Menu Icon