--- --:--:-- --

“வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்!!” தடையில் சிறு தளர்வை அறிவித்தது தமிழக அரசு!!

1.1

வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள், நீர்நிலைகளில் கரைக்கலாம் என சிறிய தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி அன்று விதவிதமான விநாயகர் சிலைகளை ஊர்தோறும், வீதி தோறும் என அலங்கரித்து வழிபடுவதும் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்ற கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக இந்தாண்டு பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

 

தமிழக அரசின் இந்தத் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது பொது இடங்களில் கூடி வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் எப்படி அனுமதிக்க முடியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் தடையை மீறுவோம் என சில அமைப்புகள் வீராப்பாக கூறியது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், தடையை மீறுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில், இந்த தடையால், விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனையாகாமல் நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தடையில் ஒரளவு தளர்வு அறிவிக்க வேண்டும். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பில் முறையிடப்பட்டிருந்தது, இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள், தடையுத்தரவில் ஏதேனும் தளர்வை அறிவிக்க முடியுமா? என அரசிடம் கேட்டு இன்று பதிலளிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

 

அதன்படி இன்று நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிப்பதாக சிறு தளர்வு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் பொது இடங்களில் பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக செல்லவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon