“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!
இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென உடல் நிலை மோசமாகி இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிர் பிரிந்தது. அவரது மரணம் இந்திய திரையுலகத்தினரையும், திரைப்பட பாடல் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தச் செய்துள்ளது.
பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.. சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய உடல் நிலை கடந்த மாதம் மிக மோசமானது.
மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது
எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டும் என இந்திய திரைப்பட உலகமே சிறப்பு பிரார்த்தனை செய்தது. அவருக்கு உலகத் தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதன் பலனாக அவருடைய உடல் நிலை தேறி வருவதாக அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண், தினசரி உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்டு வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட, எஸ்.பி.பி. உடல் நிலை நன்கு தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் மிகவும் கவலைகிடமாக உள்ளது என மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல் நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாகவும், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்ட நிலையில் அவருடைய உயிர் மூச்சு பிரிந்த செய்தி அனனவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
கின்னஸ் சாதனை படைத்தவர்
74 வயதாகும் எஸ்.பி.பி. இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக 4 தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்த பாட்டு நாயகன் ஆவார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி உலகிலேயே அதிக பாடல்கள் பாடியவர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர் எஸ்.பி.பி. ஆவார்.
எஸ்.பி.பி.யின் வாழ்க்கைச் சரித்திரத்தில் முத்தான அம்சங்களில் சில : ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ம் ஆண்டு ஜுன் 4-ந் தேதி பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.
அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.
சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.
ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி
முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.
40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.
கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
1960-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமைக்குரிய பாடும் நிலா எஸ்.பி.பி.யின் மறைவு இந்திய திரையுலகுக்கே பேரிழப்பு. அவருடைய மறைவு இந்திய திரையுலகினரையும், ரசிகர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.






