தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை!
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநின்றவூர், பட்டாபிராம், மாதர்பாக்கம், பூண்டி, சோழவரம், உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, குருவிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான மணலி, மாதவரம், புழல், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த மழை சற்று ஆறுதலை அளித்தது. கரூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கா.பரமத்தி, கரூர், தென்னிலை, உப்பிடமங்களம், குளித்தலை, மருதூர், தண்ணீர் பள்ளி, குமாரமங்கலம், நாகை இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. உமாபதி, கொடிக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று நீலகிரி, கூடலூர் ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது.







