அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் கலகக் குரல் எழுப்பினர். இதனால் அதிமுக ஈபிஎஸ் அணி, எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி என 2ஆக பிளவுபட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளும் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் தவெக-வுக்கு ஆதரவாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பின் 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஈபிஎஸ், தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 26 பேரின் கட்சிப் பதவிகளை பறித்தார்.
இந்நிலையில், தவெக ஆதரவு எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேபி முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர். தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கடிதம் வழங்கினர். அதேநேரம், சி.வி.சண்முகம் தரப்பு பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி, அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “தேர்தலுக்குப்பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை.
மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?. “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா” என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். “உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது”. என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.
புரட்சித்தலைவர் அவர்களும் புரட்சித்தலைவி அவர்களும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன… தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன். மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான்ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.





