குமரி லோக்சபா தொகுதியுடன் பாஜகவுக்கு 20 இடங்கள்… அதிமுகவுடன் ஒப்பந்தம்!
சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இதேநாளில் தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை இறுதி செய்வதில், அதிமுக – திமுக கூட்டணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் மமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், ஐ.எம்.யு.எல். ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில், முதலாவதாக பாமகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. அந்த கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் தே.மு.தி.க.வுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் அ.தி.மு.க- பா.ஜ.க தலைவர்களுடன் கடந்த வாரமே பேச்சு தொடங்கினாலும், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக, நேற்றிரவு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின்படி, அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதியும், பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில், அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
யாருமே எதிர்பாராத வகையில் பாஜக – அதிமுக இடையே திடீரென ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதும், அது குறித்த தகவல்கள் கசியவிடாமல், நள்ளிரவில் செய்திக்குறிப்பை வெளியிட்டதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






