பட்டியலின மாணவர்கள் உயர்கல்வியை தொடர உதவித்தொகை வழங்கப்படும்..!
பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி மாணவர்கள் பயனடையும் வகையில் 59 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்கள் பயனடையும் வகையில் 59 ஆயிரத்து 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிக் கல்விக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதினோராம் வகுப்பு முதல் எந்த ஒரு உயர் கல்வியையும் அரசு உதவித் தொகையுடன் பட்டியல் இன மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்திருக்கும் தொகையில் இருந்து 60 சதவீத தொகை அதாவது 35 ஆயிரத்து 534 கோடி ரூபாய், பட்டியலின மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. எஞ்சிய 40 சதவீத தொகையை மாநில அரசு வரவு வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு முடித்த ஒரு கோடியே 36 லட்சம் ஏழை மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் குறித்த பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் இல்லாததால் பத்தாம் வகுப்பு முடிக்கும் உயர்கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் மேற்படிப்பைத் தொடர அடுத்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







