உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்!
இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே, வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து,உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.
இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்தார். போப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ர மணா என்பதால், அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, என்.வி.ரமணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதி ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா, கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் எனும் கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வழக்கறிஞராக என்.வி.ரமணா தன்னை பதிவு செய்து கொண்டார்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






