--- --:--:-- --

விஸ்வரூபமெடுக்கும் சந்தனக்கட்டை பதுக்கல் விவகாரம்.கோவை போளுவாம்பட்டி வனச்சரகர் சஸ்பெண்ட். கோவை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு. வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை !!!

18

கோவை போளுவாம்பட்டி வனச்சரகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

கோவை போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கலைவாணி.இளைய மகன் உடன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கிறார். இந்நிலையில் பந்தப் பாறையில் கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கலைவாணி வனச்சரகர் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அதிகாரி வீட்டிலேயே சந்தனக்கட்டைகள் சிக்கிய சம்பவம் வனத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரக் கடத்தல் அவ்வப்போது நடக்கிறது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முள்ளங்காடு போராத்தியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. டிசம்பரில் மட்டும் நான்கு மரங்கள் கடத்தப்பட்டன. தீவிரமாக கொரோனா இருந்த காலத்தில் ஆரோக்கியசாமி காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்துள்ளார். வேட்டை தடுப்பு காவலர் கார் ஓட்டியுள்ளார். மற்றொரு வேட்டை தடுப்பு காவலர் காரிலும் சென்று வந்துள்ளார். இவர்களில் ஒருவர் போலி பில் மோசடியில் தொடர்புடையவர்.

 

தற்போது சிக்கியுள்ள வனச்சரகர் இதற்கு முன் குற்றாலத்திலும், முதுமலையிலும் பணியாற்றியவர். அங்கு நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. ஆரோக்கியசாமி மகன், மகள் ஆகியோர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதாகவும் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேற்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலக ஊழியர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்தன கட்டைகள் தோட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவை வன அதிகாரி தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை பந்தப்பாறையில் கோவை வன அதிகாரி ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாநில வனத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்ததும் வன அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மாவட்ட வன அலுவலர் முகமது ஷபாப் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon