தனது கூட்டாளியை கன்னத்தில் அறைந்ததால் இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி!
சென்னை அருகே தனது கூட்டாளியை அறைந்தவரை நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் கொலை செய்த ரவுடியை காவலர்கள் தேடி வருகின்றனர். திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சப்தம், அதை தொடர்ந்து அலறல் சப்தம், கூச்சல், குழப்பம், நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது 5 பேர் கொண்ட கும்பல்.
இவையெல்லாம் நடந்தது சென்னை பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் கூட்டோடு ஏரி. கொலை செய்யப்பட்டவர் ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த ஷ்யாம். கார் ஓட்டுநரான ஷியாமின் தம்பி விச்சு என்பவரை கடந்த ஆண்டு பிரபல ரவுடி பிகில் மணியின் கூட்டாளி மிரட்டியதாக தெரிகிறது. அதனால் பயந்து போன அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரவுடி பிகில் மணியின் கூட்டாளிகளுக்கும், ஷியாமுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மனதுக்குள் பகை நீரு பூத்த நெருப்பாய் இருந்த நிலையில் அண்மையில் பிகில் மணியின் கூட்டாளிகள் திருட்டு சிவா மற்றும் அஜித் ஆகியோரை ஷ்யாம் சந்தித்து உள்ளார். அப்போது திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிகில்மணியும் அவரது கூட்டாளிகளும் ஷியாமை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சமாதானம் பேச மேடவாக்கம் வரும்படி ஷாமுக்கு அவர்கள் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது. அதை நம்பி அங்கு சென்ற ஷ்யாம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய பிகில் மணியின் கும்பல் அரிவாளால் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து உள்ளனர். எஞ்சியவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். கன்னத்தில் அறைந்த தற்காக ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






