பிசியோதெரபிஸ்ட் அறிக்கையால் ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..!
இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிக்கை காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியான நிலையில் ரோகித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனாக விளையாடி வரும் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில் ரோகித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மா 3 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிக்கை அளித்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.







