--- --:--:-- --

இடஒதுக்கீடு – நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை

13

மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டத்திருத்த மசோதா கொண்டு வர வேண்டுமென திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

2017 – 2018 மற்றும் 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளுக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 5,530 எம்பிபிஎஸ் மற்றும் எம்டி மருத்துவ இடங்கள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை புறக்கணித்து பறிக்கப்பட்டிருப்பதாகவும் அது கடும் கண்டனத்திற்குரியது என்றும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் பொது தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்கு என தெரிவித்துள்ளார்.

 

பொது தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017 – 2018 மற்றும் 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன, மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு, என்பன உள்ளிட்ட அனைத்து இட ஒதுக்கீடு விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நடப்பு தொடரிலேயே தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்ட திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon