இந்திய வரலாற்றில் முதல்முறை… மரத்தடியில் நடத்தப்பட்ட புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்
புதுச்சேரியில் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சட்டப்பேரவைக் கூட்டம், வழக்கமாக நடைபெறும் இடத்திற்கு பதிலாக மரத்தடியில் நடத்தப்பட்டது. இப்படி சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் நடத்தப்படுவது இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறையாகும்.
உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எல்லாமே தலைகீழ் மாற்றமாகி விட்டது. அன்றாட நிகழ்வுகளுக்கு மாற்று வழியை தேட வைத்து விட்டது இந்த கொடிய கொரோனா. கூட்டம் கூடினால் கொரோனா தொற்றிவிடும் என்ற அச்சத்தால், உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் குட்டித் தலைவர்கள் வரை பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகள் கூட காணொலி காட்சி மூலம் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம், மரத்தடியில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே முதல்முறையாக கூட்ட அரங்கிற்கு வெளியில் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வழக்கமாக சட்டப்பேரவை நடைபெறும் கூட்ட அரங்கு பூட்டப்பட்டது.
ஆனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் இன்று சட்டப் பேரவை கூட்டம், புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் ஒரு மரத்தடியின் கீழ் நடத்தப்பட்டது.
திறந்த வெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இந்தக் கூட்டம் சுமார் இரண்டே கால் மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கூட்டத் தொடரை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
மரத்தடியில் நடந்த இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களோ வெளிநடப்பு செய்த சம்பவமும் அரங்கேறியது. சட்டப்பேரவை கூட்ட முடிவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஜெயபால் எம்எல்ஏ வுடன், நான், சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக ஒன்றாக பழகியுள்ளோம். எனவே நாம் அனைவரும் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.







