பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அதற்காக பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். இணையத்தில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பயோமெட்ரிக் வருகைப்பதிவு பயன்படுத்தக்கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை திறக்கக்கூடாது. பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த கூடாது. வெளியாட்கள் பள்ளிகளுக்கு வருவதை அனுமதிக்க கூடாது.
மாணவர்களின் மன நலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழுநேரமும் பள்ளியில் இருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும். அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.







