தடுப்பூசி போடப்பட்டதால் தனது 3 மாத குழந்தை உயிரிழந்துவிட்டது என உறவினர்கள் போராட்டம்!
கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உடலுடன் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுவீரப்பட்டு அருகே உள்ள அணைக்கட்டு புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஹேமலதா தம்பதியின் மூன்று மாத குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அந்த குழந்தை இன்று அதிகாலை உயிரிழந்தது. பின்னர் குழந்தையின் உடலுடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பூசியால் தான் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் சுகாதார பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உடனடியாக குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்டதற்கு உயிரிழந்த குழந்தைக்கு தடுப்பூசி போட்டது போல் 9 குழந்தைகளுக்கு போடப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதால் மருந்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.






