8 மாத கர்ப்பிணியை கணவர் அடித்துகொன்றதால் உறவினர்கள் போராட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எட்டு மாத கர்ப்பிணியை அவரது கணவரே அடித்துக் கொன்று விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. பள்ளிப்பட்டு அருகே கிராமத்தில் வசித்த ஷோபனா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணவர் தசரதன் மற்றும் அவரது உறவினர்கள் ஷோபனாவை பள்ளிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியதையடுத்து ஷோபனாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து விட்டனர். ஷோபனாவை அவரது கணவர் தசரதன் அடித்துக் கொன்று விட்டதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மருத்துவமனைக்கு வந்த போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதோடு மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
உயிரிழந்த ஷோபனாவுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அடுத்ததும் பெண் குழந்தையாக இருக்கும் என்ற நோக்கத்தில் சிசுவை கலைக்க வேண்டும் என்று கணவர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சம்மதிக்க மறுத்து வந்த நிலையில் அவரது கணவர் ஷோபனாவை அடித்துக் கொன்று விட்டார் என்பது உறவினர்களின் புகார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீசார் தசரதன் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.







