தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அது, வடகிழக்கில் நகர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.





