நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?
எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டி கொடுக்கும் முதலமைச்சர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக அரசு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளை கவனித்து வரும் தலைமை பொறியாளர் நடராஜன் திடீர் என்று மாற்றப்பட்டு சட்ட விதிகளுக்கு மாறாக சென்னை மாநகராட்சியில் அதிகாரமற்ற ஒரு பதவியில் அமர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடராஜனுக்கு பதில் சென்னை மாநகராட்சியில் இருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமை பொறியாளரை நகராட்சி ஆணையத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நியமித்து இருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் உள்ள தலைமை பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சி பொறியாளரை நியமிக்கக் கூடாது என்று தெளிவான சட்ட விதிகள் இருந்தும் அவற்றை மீறி புகழேந்தியை கொண்டுவந்தது ஏன் என கேட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற புகழேந்திக்கு நான்கு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 17,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு திரும்பத் திரும்ப பணி நீட்டிப்பு வழங்கி ஒரு தலைமை பொறியாளரை நியமித்து கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன என்று கேட்டுள்ளார்.
எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டி அளித்து வரும் முதலமைச்சர் பழனிசாமி இந்த 17,000 கோடி ரூபாய் திட்டங்கள் குறித்தும் நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனம் ஆகியவை குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா என்றும் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.







