தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை..!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 31ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 31 மற்றும் புத்தாண்டு அன்று தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





