வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை!
மே 29 மற்றும் 30ம் தேதிகளில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை கடந்த சில நாட்களாக 45 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டியது.
வட இந்தியாவிற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வண்ண குறியீட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 29மற்றும் 30 ஆகிய தேதிகளில் புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை ஆய்வு துறை தலைவர் குல்திப் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கோடை வெயில் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சூருவில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் பாலம் விமான நிலைய பகுதியில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல பகுதிகளில் இன்றும் கடும் வெயில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு பிறகு வெயில் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







