--- --:--:-- --

இறுதி பட்டியல் வெளியீடு – தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் போட்டி

1

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் மட்டும் 54 பேர் களமிறங்கியுள்ளனர்.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 27-ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஆயிரத்து 403 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 

இதில், ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், 135 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இவர்களில் 874 பேர் ஆண்கள் எனவும் 76 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்கு அடுத்ததாக, தென்சென்னை தொகுதியில் 41 பேரும், நாமக்கல்லில் 40 பேரும் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக, நாகை தொகுதியில் வெறும் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். அதேபோல காஞ்சிபுரத்தில் 11 பேரும், தஞ்சாவூரில் 12 பேரும், திருப்பூரில் 13 பேரும் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 26 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 10 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சேர்த்து விளவங்கோடு இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது.

Right Menu Icon