தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து எப்போது? முதல்வர் எடப்பாடி விளக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24-ந் தேதி அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு, அவ்வப்போது சில தளர்வுகளுடன் இம்மதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் இயங்கலாம். கடைகள், ஒட்டல்கள் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரம் வரை திறக்கலாம் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுப் போக்குவரத்து இன்னும் முடங்கியுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்கும் கடும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ள தமிழக மக்கள், பொதுப் போக்குவரத்துக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தென் மாவட்டங் ஆளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளான நெல்லையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பொதுப் போக்குவரத்து எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போது வாய்ப்பு இல்லை.
இ-பாஸ் முறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முறையாக விண்ணப்பித்தால் எளிதில் இ-பாஸ் பெறுவது நடைமுறையில் உள்ளது. இ-பாஸ் விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே தமிழக அரசு செயல்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.







