பொதுமுடக்கத்தால் தள்ளிப்போகும் அரசுப் பணியாளர் தேர்வுகள்!
பொது முடக்கம் காரணமாக அரசு பணியாளர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நடப்பாண்டு உடன் வயது வரம்பு முடியும் நபர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு பதவிகளில் அலங்கரிக்க வேண்டும் என்பது பலருக்கும் சிறுவயது முதலே கனவாக இருக்கும். அதற்காக உழைத்து வரும் மாணவர்களுக்கு கொரொனா பரவல் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பொது முடக்கம் காரணமாக மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த குருப் 1 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்ட குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி தேர்வு அக்டோபர் 4ம் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், குரூப்-4 தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் தங்கி தேர்வுக்காக தயாரான மாணவர்கள் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர்களில் முடங்கியுள்ளனர். இதனால் தேர்வுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நடப்பாண்டுடன் வயது வரம்பு முடிவடையும் தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு வயது வரம்பை குறைந்தபட்சம் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







