அதிமுகவில் இணைந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம்..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, காயத்ரி ரகுராம் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்மைக் காலமாக திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இவர், அந்த கட்சிக்காக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டதுடன் மேடைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். இவருக்கு, பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, பாஜகவில் இருந்து 6 மாதம் தற்காலிகமாக அவர் நீக்கப்பட்டார். பின்னர், கடந்த 2023 ஜனவரி மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.
கடந்த ஓராண்டாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காயத்ரி ரகுராம், அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
மேலும், தனது குடும்பத்தினர் தொன்றுதொட்டு அதிமுகவில் இருந்து வந்ததாக கூறினார். அந்த வகையில், நன்றி மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்ததாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.






