மதுபோதையில் வாகனம் ஓட்டியவரிடம் அபராதத்தை விட கூடுதல் தொகை கேட்ட காவலர் – வைரல்
மதுரையில் குடித்துவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நபருக்கு போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் 10,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் 500 ரூபாய் கூடுதலாக வேண்டும் எனக் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் ஹரிச்சந்திரன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குடித்துவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு அபராத தொகையுடன் கூடுதலாக 500 ரூபாய் கேட்டதாக தெரிகிறது.
கூடுதல் தொகை எதற்கு எனக்கேட்ட வாகன ஓட்டியிடம் கூடுதல் தொகையை கொடுத்தால்தான் அசல் வாகன உரிமம் கிடைக்கும் என காவலர் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இதுகுறித்து அரிச்சந்திரனிடம் கேட்ட போது வாகன உரிமம் இல்லாததற்கும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கும் சேர்த்து நீதிமன்றத்தில் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், இங்கு வாகனம் உரிமம் இல்லாததற்கு 500 ரூபாய்க்கு ஈ செலான் வாங்கிக் கொண்டால் அவ்வளவு தொகை கட்ட தேவையில்லை என்ற நல்ல எண்ணத்தில் தான் அவர் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதுகுறித்து மாநகர காவல் துறை துணை ஆணையரிடம் கேட்டபோது இந்த வீடியோ குறித்து விசாரித்து வருவதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர், வீடியோவை வைத்து மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.






