சென்னையில் 257 இடங்களில் காவல்துறை கண்காணிப்பு..!
கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட் தல’ மோதலை தடுப்பதற்காக சென்னை முழுவதும் 257 இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் சிலர், பேருந்து மற்றும் மின்சார ரயில்களில் சாகச பயணமாக நினைத்து அத்துமீறலில் ஈடுபடும் வேளையில், சில நேரங்களில் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
தற்போது, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே மோதல் போக்கை தடுக்கும் வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து மொத்தமாக 257 இடங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து நிலையங்கள், பேருந்து வழித்தடங்களில் காவல்துறையினரும், சென்னை சென்ட்ரல், ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே காவலர்களும் கண்காணிப்பு பணியை தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். நெறிமுறை மீறும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





