--- --:--:-- --

போலீசுக்கு வாக்கி டாக்கி வாங்கியதிலும் ஊழல்..? எஸ்.பி., டிஎஸ்பி.,க்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனையால் பரபரப்பு!!

12

தமிழக காவல் துறைக்கு வாக்கி டாக்கி உள்ளிட்ட தொலைத் தொடர்பு கருவிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பல்வேறு மாவட்ட எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் சப்ளை செய்த நிறுவனங்கள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக காவல் துறைக்கு கடந்த ஆண்டு வாக்கி டாக்கி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் வாங்க டெண்டர் லிடப்பட்டது. இதில், மாவட்ட அளவில் காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். விசாரணையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் முறைகேடாக டெண்டர் விடப்பட்டு ரூ.350 கோடி வரை ஊழல் நடைபெற்றது தெரிய வந்தது.

 

இந்த முறைகேட்டில் பல்வேறு மாவட்டங்களின் எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சில மாவட்ட எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.மேலும் கருவிகள் சப்ளை செய்த தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.

 

காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ. 350 கோடி வரை ஊழல் நடைபெற்று, அதில் உயர் போலீஸ் அதிகாரிகளே ஈடுபட்டுள்ளதும், அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon