டிஎன்பிஎஸ்சி முறைகேடு : தினமும் அம்பலமாகும் புதுப்புது மோசடிகள்..! இன்றும் 2 அரசு ஊழியர்கள் கைது!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மோசடியைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் நடந்த முறை கேடுகள் அம்பலமாகி அரசு ஊழியர்கள் பலரும் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இன்றும் 2 அரசு ஊழியர்களை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.
கடந்தாண்டு செப்டம்பரில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் மெகா முறைகேடு நடந்தது அம்பலமாகி, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ,வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதுடன் அவர்களில் சிலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் அரசு ஊழியர்கள் பலருக்கும் சம்பந்தம் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 முறைகேடு போலவே,2017-ல் நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று பலரும் அரசு ஊழியர்களாக பல்வேறு துறைகளில் பணியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்வில் முறைகேடாக தேர்வாகி அரசு ஊழியர்களாக உள்ள பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளும் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முறைகேட்டில் காவல்துறையில் பணியாற்றும் சித்தாண்டி, இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் ஆகியோர் முக்கியப் புள்ளிகளாக செயல்பட்டது தெரிய வந்து கைதாகி, சிபிசிஐடி விசாரனையில் உள்ளனர். விசாரணையில் இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே டிஎன்பிஎஸ்சி நடத்திய பல தேர்வுகளில் முறைகேடு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள், அரசியல் முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் தமக்கு மட்டுமே பங்கிருப்பதாக திரும்பத் திரும்ப கூறி வருகிறாராம். மேலும் ஜெயக்குமாரை பலிகடாவாக்கி இந்த விவகாரத்தை அமுக்கி விட டிஎன்பிஎஸ்சி தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும் இப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017-ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து அரசு ஊழியர்களாக பணியாற்றி வந்த மேலும் 2 பேரை . சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.கரூர் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 2 ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் மேலும் பல ஊழியர்கள் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






