தமிழகத்தில் டாஸ்மாக்கை 2 மணி நேரம் திறக்கக் கோரிய மனு!
ஊரடங்கு உத்தரவின் காரணமாக மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை இரண்டு மணி நேரம் திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் மது அருந்துபவர்கள் திடீரென மது குடிப்பதை நிறுத்தினால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாவதாகவும், கள்ளச்சந்தையில் மது பானங்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் இதனை தடுக்க குறைந்தபட்ச நேரத்திற்கு டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அசாம். கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனை சுட்டிக்காட்டி அரசு தரப்பு வழக்கறிஞர் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 99 பெயரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சிலர் மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 99 பேரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள 112 பேரை தேடி வருகின்றனர். இதே குற்றத்திற்காக சென்னை அசோக் நகரில் இருவரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.







