ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு சிக்கல்..? திரையிட தடை கோரி வழக்கு!!
ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ந் தேதி திரையிடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியில் நடிப்பில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனால் தர்பார் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், தர்பார் படத்திற்கு தடை கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய்.கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்த போது ரூ.12 கோடியை தங்களிடம் கடனாக வாங்கியதில் வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி தர வேண்டியுள்ளது. எனவே அதனை திருப்பித் தரும் வரையில் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான தர்பார் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என மலேசிய நிறுவனம் மனுவில் கூறியுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில், தர்பார் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் வரும் 2-ந் தேதி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் .இந்த வழக்கு காரணமாக ரஜினியின் தர்பார் படம் திட்டமிட்டபடி 9-ந் தேதி ரிலீசாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.





