ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி..!
தமிழ்நாட்டின் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையோடு அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 33 இடங்களில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஆர்எஸ்எஸ் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த விண்ணப்பத்தில் உரிய தகவல் இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் பேரணிக்குரிய அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி போராட்டங்களுக்கு அனுமதி கோரியுள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அனுமதி கோரிய இடங்களில் மசூதிகள், தேவாலயங்கள் இருப்பதாகவும் பேரணியால் சட்டமன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை அரசு கூறி வருவதாகவும் ஜாதகத்தை தவிர அனைத்து தகவல்களையும் காவல்துறையினர் கேட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
பேரணிக்கு அனுமதி மறுத்ததற்காக காவல்துறை கூறிய காரணங்கள் ஏற்க கூடியதாக இல்லை என்றும் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளுடன் பேரணியை அனுமதிக்கலாம் எனவும் அவர் உத்தரவிட்டார்.





