--- --:--:-- --

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம்..!

7

மிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

 

எட்டு தளங்களுடன் அமையவுள்ள இந்த மையத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அங்குள்ள நூலகப் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவுகள், கலையரங்கம் மற்றும் அறிவியல் சார்ந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள கோளரங்கில் 3D கண்ணாடி அணிந்து முப்பரிமாண காட்சிகளை முதலமைச்சர் கண்டு ரசித்தார்.

 

மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் மற்றும் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும், பல்வேறு அறிவியல் கருவிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், அமைச்சர்கள் சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு வட்டம் தெலுங்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்றார். சந்தோஷ் என்பவரின் 8 வயது மகளான வெண்பா, உடல்நலமின்மையால் கடந்த 24-02-2026 அன்று மூளைச் சாவு அடைந்தார். இக்கட்டான அந்தச் சூழலிலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யப் பெற்றோர்கள் முன்வந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

 

இன்று (27-02-2026) நண்பகல் 12 மணியளவில் சிறுமியின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, மகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

 

Right Menu Icon