இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், வரிக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆண்டு என்பதால், பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் வழக்கமாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படாது என்றும் அதற்கு பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா கண்ட வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலத் ஜோஷி மற்றும் 30 கட்சிகளைச் சேர்ந்த 45 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, கடந்த கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மீதான நடவடிக்கைகயை ரத்து செய்ய மக்களவை மற்றும் மாநிலங்களைவைத் தலைவர் இருவரும் ஒத்துக் கொண்டுள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் அவைக்கு வரலாம் என தெரிவித்தார்.
ஆனால், அதில் மக்களவையை சேர்ந்த 3 எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 14 பேரின் சஸ்பென்ட் மட்டுமே நேற்று ரத்து செய்யப் பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக் கூறினார்.
நடப்புக் கூட்டத் தொடரில் மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநர்களின் செயல்பாடுகள், மாநிலங்களுக்கான நிதி குறைப்பு, நீட் விவகாரம், சண்டிகர் மேயர் தேர்தல் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.





