--- --:--:-- --

பல்லடத்தில் ஆனந்தனுக்கு அதிர்ஷ்டம்… சின்னத்தால் மட்டுமே அவிநாசியில் முந்தும் அதிமுக!!

msm anandan

பல்லடத்தில் தனது தீவிரப்பிரசாத்தின் அதிமுகவின் வெற்றிக்கு ஆனந்தன் வலுவான அஸ்திவாரம் போட்டுள்ளார். அதற்கு நேர்மாறாக, வேட்பாளரால் பலவீனமாக அவிநாசியில் இரட்டை இலை என்ற சின்னம் மட்டுமே அதிமுகவை தூக்கி நிறுத்துகிறது என்பதே, இறுதிகட்ட கள நிலவரமாகும்.

 

பல்லடம்

 

வரும் 6ம் தேதி நடக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் க. முத்துரத்தினம், உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கியுள்ளார். அத்துடன், பல்லடத்தில் நன்கு அறிமுகமான மண்ணின் மகள் என்ற பெருமையோடு, அமமுக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகிறார். மக்கள் நீதிமய்யம் சார்பில் அக்கட்சியின் விவசாயிகள் பிரிவு மாநிலச் செயலாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கரிகாலன் (எ) சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள், இத்தேர்தலில் வேட்பாளர்களாக உள்ளனர்.

 

கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் அ. நடராஜன், திமுக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, மதிமுக சார்பில் க.முத்துரத்தினம், பாஜக சார்பில் சு.தங்கராஜ், பாமக சார்பில் எஸ்.குமார், கொமதேக சார்பில் கரைப்புதூர் சி. ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். இவர்களில், 1,11,866 வாக்குகள் பெற்று அதிமுகவின் அ. நடராஜன் வெற்றி பெற்றார். ஆனால், வெற்றி மாலை சூடித்தந்த மக்களின் நம்பிக்கையை கரைப்புதூர் நடராஜன் காப்பாற்றவில்லை. இதனால் அதிமுகவின் செல்வாக்கு சரிந்தது.

 

 

இதை உணர்ந்த அதிமுக தலைமை, கரைப்புதூர் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக, திருப்பூர் மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியான முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனை, இம்முறை பல்லடத்தில் நிறுத்தியது. மக்களை எளிதில் அணுகுபவர், கடுமையாக உழைத்து தீவிர பிரசாரம் செய்பவர், அசராமல் உழைப்பவர் என்று கட்சியினர் மத்தியில் நல்ல பெயரை எடுத்த ஆனந்தனை நிறுத்தியதுமே அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.

 

ஆனந்தனின் இந்த கடின உழைப்பு, அதிமுகவுக்கு கைமேல் பலன் தந்துள்ளது. இப்போது அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பல்லடத்தில் பிரகாசமாக உள்ளது. பல்லடத்தில் பலவீனமாக இருந்த அதிமுகவின் இமேஜை, அதிமுக வேட்பாளர் ஆனந்தன், தனது தீவிரப்பிரசாத்தின் மூலம் நிமிர்த்தியுள்ளார். பல்லடத்தில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெறுவார் என்பதே கடைசிகட்ட களநிலவரமாக உள்ளது.

 

அவிநாசி

 

பல்லடத்தில் ஆனந்தனால் அதிமுக தலை தூக்கியிருக்கும் நிலையில், அவிநாசியில் வேட்பாளர் தனபாலால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு உள்ளது. எனினும் இரட்டை இலை என்ற சின்னத்திற்கு உள்ள மவுசே அதிமுகவை கரை சேர்க்கிறது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் சபாநாயகர் ப.தனபால் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவை கட்சித் தலைவர் அதியமான் இங்கு போட்டியிடுகிறார். அமமுக கூட்டணியில், தேமுதிக மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏ.வெங்கடேஸ்வரன், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் சோபா உள்ளிட்டவர்களும் களத்தில் உள்ளனர்.

 

 

கடந்த 5 ஆண்டுகளில், அவிநாசி தொகுதி பக்கம் சரிவர எட்டிப்பார்க்கவில்லை. தொகுதியில் நல்லது கெட்டது எதற்கும் சபாநாயகர் வந்து சென்றதில்லை. குறைந்தபட்சம் தொகுதி நிகழ்வுகளுக்கு, கட்சி விழாக்களுக்கும் கூட அவர் வந்து சென்றதில்லை. இதனால், பெரும்பாலான அதிமுகவினர், சபாநாயகர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். சரி, மக்களுக்காவது ஏதேனும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தாரா என்றால் அதுவும் இல்லை.

 

இதனால், அதிமுகவின் கோட்டையான அவிநாசியில், தனபாலின் அணுகுமுறையால் பெரும் ஓட்டை விழுந்துள்ளது. தொகுதியில் தன்னை எதிர்த்து வலுவான போட்டியாளரை திமுக நிறுத்தவில்லை என்ற அலட்சியம், அவரை மீண்டும் பழைய தனபாலாக மாற்றிவிட்டதாக, அவிநாசி அதிமுகவினர் புலம்புகின்றனர். சரிவர கூட்டணி கட்சியினரை அணுசரிப்பதில்லை, பிரசாரத்திற்கு செல்வதில்லை என்று அதிமுகவினர் புகார்களை அடுக்குகின்றனர்.

 

இப்படி வேட்பாளரால் அவிநாசியில் அதிமுக பலவீனமாக இருந்தாலும், கிராமப்பகுதிகளில் இன்னமும் இரட்டை இலைக்கென்று ஒரு மவுசு உள்ளதை எங்கள் கடைசி கட்ட கள ஆய்வில் காண முடிந்தது. இரட்டை இலை சின்னத்திற்கு உள்ள மவுசால், அவிநாசியில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. அவிநாசியில் அதிமுக வென்றால் அதில் தனபாலின் பங்களிப்பு ஜீரோதான்; இரட்டை இலைதான் ஹீரோ என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.

 

எனவே, அவிநாசி என்றுமே அதிமுகவின் கோட்டை என்பது, வரும் தேர்தலிலும் நிரூபணமாகும் என்பதே கடைசி கட்ட நிலவரமாக இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon