எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..!
இந்தியாவின் எல்லைக் கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நள்ளிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலை தொடர்ந்து தப்பிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் 4 முறைக்கு மேல் நெருங்கிய நிலையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம், தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இப்படி, பஹல்காம் தாக்குதலுக்கு பின் காஷ்மீர் குறித்து தினம் தினம் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் இந்திய எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று (மே 1ம் தேதி) நள்ளிரவு இந்தியாவின் எல்லைக் கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நள்ளிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 8வது நாளாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவம் வெளியிட்ட தகவலில், “ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தின.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது” என்று கூறப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் இந்திய எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





