--- --:--:-- --

வெப்ப அலை..11 மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆணை..!

2

கோடை வெப்ப அலைகளிலிருந்து மக்களின் உயிரை பாதுகாக்க 11 மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் அதிகளவிலான வெயிலும், சில பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது.

 

இதனால் மக்கள் வெளியே சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், கோடை வெப்ப அலைகளிலிருந்து மக்களின் உயிரை காக்க 11 மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2018 முதல் 2022 வரை வெப்பம் மற்றும் வெயில் தாக்குதலால் 3,798 பேர் இறந்ததாக NCRB தரவுகள் தெரிவிக்கின்றன. போதுமான தங்குமிடம் உள்ளிட்டவை இல்லாததால் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள், வெளிப்புற தொழிலாளர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் குறிப்பாக வீடற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை கருதி 11 மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் எழுதிய கடிதத்தில், தங்குமிடங்களை வழங்குதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், வேலை நேரங்களைத் திருத்துதல் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான நடைமுறைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவி, அதை செயல்படுத்த வேண்டும். போதுமான காற்றோட்டம், மின்விசிறிகள், குடிநீர் மற்றும் அடிப்படை மருத்துவப் பொருட்கள் கொண்ட பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை செயல்படுத்த வேண்டும் . வேலை நேரங்களை திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Right Menu Icon