பஹல்காம் தாக்குதலுக்கு பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் – ராஜ்நாத் சிங்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இந்நிலையில், சுமார் 45 நிமிடங்களுக்கு விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு புறம், பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடியை தரும்வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் துறைமுகங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோவின் ”எக்ஸ்” தளப் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்புவதாக கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு, பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவைத் தாக்க துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது தனது பொறுப்பு என்று கூறினார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பொதுமக்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று ராஜ்நாத் சிங் உறுதிப்படக் கூறினார்.






