2026யில் அரசியல் அத்தியாயம் முடியும் – ஆர்.எஸ் பாரதிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலுடன் முடியப் போவது உறுதி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்த நிலையில், திமுகவின் அத்தியாயம் தான் முடியப்போகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம் என்றும், பாஜகவுக்கு உதவிடவே நேரம் இல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எப்படி நினைவுக்கு வரும்? எனவும் வினவியுள்ளார்.
மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என்பதை பட்டியலிட்டு கூற முடியுமா எனவும் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக – பாஜக கூட்டணியைக் கண்டு திமுக பதறிப்போயுள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதி புலம்பித் தள்ளியிருப்பதாக சாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்திய பின்னர் தான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 100 நாள் வேலைத் திட்ட நிதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், 2026-இல் திமுகவின் அரசியல் அத்தியாயத்திற்கு மக்கள் முடிவுகட்டுவார்கள் எனவும் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.






