தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.






