என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ், தேமுதிக..!
என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக மீண்டும் இணைந்த நிலையில், ஓபிஎஸ், தேமுதிகவும் இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற தீவிரம் காட்டி வந்தது பாஜக.
இந்த நிலையில்தான் அமமுக இணைப்பு நடந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணையும்போது, ஈபிஎஸ் – அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்தனர். ஆனால், இந்தமுறை, அதிமுகவினர் இல்லாமல், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் அமமுக இணைப்பு நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அதனை நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாக மறுத்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கும் டிடிவி தினகரனை வரவேற்று வாழ்த்துவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தன்னை மனதார வரவேற்று வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.





