ஓம் பசுமை அங்காடி சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் முத்தமிழ் மேடை நிகழ்ச்சி
திருப்பூர் ஓம் பசுமை அங்காடி, உமாசங்கர் சாந்தி அறக்கட்டளை, திருப்பூர் சைவ சித்தாந்த சபை, சேக்கிழார் அரங்கம் சார்பில் மாதந்தோறும் தமிழ் வளர்ச்சிக்கான கருத்தரங்குகள், ஆன்மீக சொற்பொழிவு, பட்டிமன்றம், மருத்துவ நிகழ்ச்சி, மக்களுக்கான பொழுதுபோக்கு உள்பட பல்சுவை நிகழ்ச்சிகள் திருமுருகன்பூண்டி மாணிக்கவாசகர் தமிழ் அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முத்தமிழ் மேடை என்னும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஓம் பசுமை அங்காடி நிர்வாக இயக்குனர் உமாசங்கர் தலைமை தாங்கினார். திருப்பூர் சைவ சிந்தாந்த சபை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். விழாவில் திருப்பூர் சைவ சிந்தாந்த சபை பாலர்சபை மாணவிகளின் “பண்ணும், பரதமும்” நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து ஆனந்தி ஹரிஹரனின் ஸ்ரீ ஹரி சங்கீத கலாலயம் இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து கே.எஸ் நடனாலயா குழுவினருடன் இணைந்து அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பரதம், கோலாட்டம், சிலம்பம், நாடகம் உள்பட பல்வேறு பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் சைவ சிந்தாந்த சபை உபதலைவர் கருணாகரன் நன்றி கூறினார். விழாவினை தமிழாசிரியர் குமரேசன் தொகுத்து வழங்கினார்.






