பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். வரும் ஜூலையுடன் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவு பெறும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தலைமை தீவிரம் காட்டியது. தொடக்கத்தில் இருந்தே நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டன.
இதனிடையே, பாஜக தேசியத் தலைமை நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் வியாழக்கிழமையன்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அலுவலர் சக்கரவர்த்தி வெளியிட்டார்.
அதில், 10 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர், 3 ஆண்டுகள் தீவிர கட்சிப் பணியாற்றியவர்கள் தலைவர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகளே ஆனதால் அவர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அவர் போட்டியிடலாம் என்றும் தேர்வு செய்வது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என தேர்தல் அலுவலர் சக்கரவர்த்தி கூறினார்.
நேற்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதுவரை யாரும் தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இதனிடையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவானது இன்று மாலை 4 மணி அளவில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். இதற்கான சான்றிதழை நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.






