இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்..!
2025-ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் விதமாகவும், 2026ஆம் ஆண்டுக்கு வரவேற்பளிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.சென்னையில் மெரினா கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், காமராஜர் சாலையில் ஏராளமான மக்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டத்துக்குப் பெயர்பெற்ற புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கரைபுரண்டது. புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். டிரோன் காட்சிகளும், வாண வேடிக்கைகளும் மக்களின் உற்சாகத்தை அதிகரித்தது. புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், முழு ஆடு கொண்டு தயாரிக்கப்பட்ட மட்டன் மந்தி பிரியாணி உணவுகள், பல்வேறு வகையான சாலட்கள் உள்ளிட்டவை உணவு பிரியர்களை ஈர்த்தன.
தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் குவிந்த இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று மாலை முதலே கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு வாண வேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்கள் என மக்கள் ஒரே இடத்தில் கூடி கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் வண்ண வாணவேடிக்கைகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
புத்தாண்டையொட்டி, கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.






