புகாரில் சிக்கிய நெல்லை எஸ்பி மாற்றம்: குவாரிகளிடம் கப்பம் வாங்கிக் கொடுத்த காக்கிகள் கலக்கம்!அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயார்!!
தென்மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய மாவட்டம் என்றால் அது நெல்லைதான். அல்வாவுக்கு மட்டும் இந்த மாவட்டம் பெயர் போனது அல்ல, ஜாதிப்பிரச்சினை, கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை, வெட்டுக்குத்து என அனைத்திற்குமே பிரபலமானதுதான். இந்த கலவர பூமிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த அருண்சக்திகுமார் மாற்றலாகி சென்ற பின்னர், வடமாநிலத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் மீனா நியமிக்கப்பட்டார்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கதையாகத்தான் ஆரம்பத்தில் இவரது செயல்பாடு அமைந்திருந்தது. ஆனால் இலைமறை காய்மறையாக மாவட்டம் முழுவதும் கல்லா கட்டுவதில் கைதேர்ந்து செயல்பட்டிருக்கிறார் என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் அறிந்ததும் அதிர்ந்து போய் விட்டார்கள்.
மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து தனக்கு மாதாந்திர மாமூலாக ரூ.25 லட்சம் வரை அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் தினமும் வண்டிகளை பிடித்து அதிகபாரம் ஏற்றிச் சென்றதாகவும், மேலும் பல வழக்குகளில் பிணைக்கப்படுவீர்கள் எனவும் எச்சரித்து பெயரில் அளவில் வசூல் நடத்தப்படுவதாக காவல்துறை உயர்மட்டத்துக்கு புகார்கள் குவிந்தன.
இதன் எதிரொலியாகத்தான் அவர் நெல்லையில் இருந்து திடீரென சென்னையில் உள்ள ஒரு டம்மியான பொறுப்புக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலவர பூமிக்கு பணி மாறுதல் பெறவே பலரும் யோசிக்கும் நிலையில், வசூலில் கொடிகட்டி பறந்து ருசிகண்டு விட்டதால் மீண்டும் நெல்லையிலேயே தொடர்ந்து பணிவாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள மேலிடத்தை நாடியதாகவும், மேலிடம் இதற்கு மறுத்துவிட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் சென்னைக்கு நடையை கட்டிவிட்டாராம்.
இந்தநிலையில் பணிமாறுதலில் சென்றுள்ள எஸ்பிக்கு வசூல்வேட்டைக்கு உதவிகரமாக இருந்த எஸ்பி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் யார் யார்? என்பது குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைவரும் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாத்தான்குளம்சம்பவத்திற்கு பிறகு தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல்துறை உயரதிகாரிகள் புகாருக்கு உள்ளாகும் காவல்துறை நபர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதால் வசூல்வேட்டை சம்பவத்தில் தொடர்புடைய காக்கிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற பிரச்னைகள் மிகுந்த நெல்லை மாவட்டத்தில் புதிய எஸ்பி எதிர்கொள்ள காத்திருக்கும் சவால்கள் நிறைய உள்ளன. ஆனால் எஸ்பி மணிவண்ணன் ஏற்கனவே தென்மாவட்டத்தில் கன்னியாகுமரியில் பணியாற்றியவர் என்பதால் பிரச்னைக்குரிய காவலர்களை களையெடுத்து விட்டு நிர்வாகத்தை சீரமைப்பார் என காவல்துறை வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






